Wednesday, September 01, 2004

கலைச்சொற்கள் தேவைதானா?

நேற்று நான் இணையத்தில் என்னுடைய முதல் எழுத்துக்களை பதித்தேன். அப்படி பதித்ததும் எனக்கு ஒரு தோழியார் "நீங்கள் உங்கள் வலைப்பதிவில் "வலைப்பதிவு" என்பதற்குப் பதிலாக "Bloggers" என்று எழுதியிருந்தீர்கள்" என்று குறிப்பிட்டார். அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது "கலைச்சொற்கள்" ஒரு மொழிக்கு அவசியமா? இதைப் பற்றித்தான் நான் உங்களிடம் இன்று பேசபோகிறேன்.

முதலில் "கலைச்சொற்கள்" ஏன் உருவெடுத்தது என்று சிந்தித்தேன். மனிதன் எத்தனை எத்தனையோ சாதனைகளை நிகழ்த்துகிறான், பல புதிய பொருட்களையும் நிகழ்வுகளையும் (அறிவியல் சார்ந்த்வை) கண்டுபிடிக்கிறான். அதே மனிதன் பல மொழிகளையும் பேசுகிறான். இப்படி அவன் செய்கிற ஒவ்வொரு செயலையும் மற்றவர்கள் புரிந்து கொள்ள அவற்றை தனக்கு தெரிந்த மொழியினில் ஆராய்ச்சி கட்டுரைகளாக எழுதி பரப்புகிறான். அப்படி வெளியிடுகிற பொழுது பல புதிய சொற்கள் உருவெடுக்கின்றன. இவைகள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக "Bus" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இது ஒரு ஆங்கிலச் சொல் (என்று தான் நான் நினைக்கிறேன்). இந்த சொல்லுக்கு பல மொழிகளில் மொழியாக்கம் உண்டு, ஆனால் இந்த சொல்லையே பெரும்பாலான மொழிகளில் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு எடுத்துக்காட்டுக்காக "e-mail" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். நாம் இதனை "மின்னஞ்சல்" என்று சொல்லுகின்றோம், அதே போல பிற மொழிகளிலும் இந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.

இந்த இரண்டு சூழ்நிலைகளையும் நாம் ஒப்பிட்டு பார்த்தல் வேண்டும். அப்படி நான் ஒப்பிட்டு பார்த்ததில் ஒரு உண்மை எனக்கு தெரியவந்தது. நாம் ஒரு வேற்று மொழிச் சொல்லுக்கு எத்தனை கலைச்சொற்கள் உருவாக்கினாலும் அதன் எளிமையை பொருத்தே அதன் பயன்பாடு அமையும். "Bus" என்ற எளிமையான சொல்லை விடுத்து யாரேனும் "பேருந்து" என்று புகல்வார்களா? இங்கு தான் கலைச்சொற்களை முன்மொழியும் அறிஞர்கள் கவனமாய் இருக்க வேண்டும். சொல்லின் எளிமையை கருத்தில் கொண்டே கலைச்சொற்களை உருவாக்க வேண்டும். இது கலைச்சொற்களின் பல பரிமானங்களில் ஒன்றுதான் என்பது உண்மை. என்னை பொருத்தமட்டில் கலைச்சொற்கள் எளிமை, தெளிவான பொருள் மற்றும் மக்களால் பயன்படுத்தப்படுகின்ற சொற்களாய் இருத்தல் என்ற மூன்றையும் நிச்சயமாய் உள்ளடக்க வேண்டும். அப்படி உருவாகுமேயானால் கலைச்சொற்கள் மக்களால் உபயோகப்படுத்தப்படும். எதிர் வரும் இளைய சமுதாயம் தமிழை நிலை நிறுத்த ஏதுவாய் இருக்கும்.

என்ன நான் சொல்வது சரி தானே! நீங்க ஒப்புக்கொள்ளலையா? எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துப்போம் :-)

5 Comments:

Anonymous Anonymous said...

தம்பி பேசும்போது ஆங்கிலக்கப்பிலான தங்கிலிஷ் தாரளமாக மொழியில் கலந்துவிடுகிறது!
எழுதும் போதாவது தூய தமிழினைப் பாவிக்கலாம் தானே! நீங்கள் சொல்லும் கருத்தினை நான் ஏற்றுக் கொண்டாலும்
Blog தமிழ்ப் படுத்தி வலைப்பதிவு என கவிதைத்துவமான பெயரை எதற்கு உபயோகிக்கத் தயங்குகிறீர்கள் என அனக்குப் புரியவில்லை!

புதிதாக உருவாக்கப் படும் வேற்று மொழிச் சொற்களிற்கு சரியான தமிழ்ச் சொல் கண்டுபிடிக்கப் படும் இடத்து அதனை பேச்சு வழக்கில் உபயோகிக்காவிடினும்
எழுதும் போது கையாளுவது சாலச் சிறந்தது என்பது என் கருத்து!. இல்லாவிடின் இன்னும் இரு தலைமுறைகளில் பாதித் தமிற் சொற்கள் அழிந்தொழிந்து போய்விடும்!

Bus ற்கு தமிழ் பேருந்து என நீங்கள் சொல்கிறீர்கள், உங்கள் பேரன் "Bus" தமிழ்ச் சொல்லே தான் என்று சொன்னாலும் சொல்லக் கூடும்!

-நிர்வியா

September 1, 2004 at 5:06 p.m.  
Blogger SATHYARAJKUMAR said...

புதிதாக தமிழ் கற்க முயல்பவர்கள் சொல்லும் மிகப் பெரிய குற்றச்சாட்டு எழுதுவது ஒன்று பேசுவது ஒன்று என்பதுதான். கலைச் சொல்லோ, அயல்ச் சொல்லோ, எழுத்துக்கும், பேச்சுக்குமான இடைவெளி நிறைய குறைய வேண்டும்.

September 1, 2004 at 8:07 p.m.  
Anonymous Anonymous said...

எளிமை என்பதற்காக நான் பிறமொழி வார்த்தையைத் தான் பயன்படுத்துவேன் எனச் சொல்வது பொருந்தாது. தமிழ் வார்த்தை அதற்கு ஈடாக உள்ளது என்றால் அதை பயன்படுத்த விளைய வேண்டும். ஆங்கில வார்த்தை தான் எனக்குத் தெரியும் என்று சொல்லும் அதே நேரத்தில் அதற்கு நிகரான தமிழ் வார்த்தை என்ன எனத் தேடினால் நிச்சயம் கிடைக்கும். பேசிவிட்டுப் போகும் வார்த்தைகள் காற்றில் கலந்து போகும். ஆனால் ஏட்டில் ஏற்றும் வார்த்தைகள் நல்ல தமிழ் வார்த்தைகளாக இருந்தால் மொழி வளர ஏதோ சிறு உதவி புரிந்ததாய் இருக்கும். உருவாக்கிய கலைச் சொற்கள் பயன்படுத்த, பயன்படுத்த எளிமை அடைந்து விடும்.

September 2, 2004 at 11:18 a.m.  
Blogger முத்துகுமரன் said...

சித்திரமும் கைப்பழக்கம். கலைச் சொற்கள்ஓரளவிற்காவது எளிமையாக இருக்க வேண்டும். அது அறிஞர்களின் கையில் இருக்கிறது. எடுத்துகாட்டாக நான் பனிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியில்தான் படித்தேன். கணிப்பொறி பாடம் உட்பட . ஆனால் அவை அச்சுறுத்துவனவாக இருந்தன. keyboard என்னும் சொல்லுக்கு கட்டை விரற் பட்டடை என்று சொல்லியிருந்தார்கள். விசைப்பலகை எளிமையாக இருக்கிறதே. கலைச் சொல்லாக்கும் அறிஞர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அதீத ஆர்வத்தினால் பயன்பட இலகுவற்ற சொற்களளாக்கக் கூடாது

June 13, 2005 at 12:07 a.m.  
Anonymous அ.ஜான் பீட்டர்,திருவாரூர் said...

வாங்க.தொடர்ந்து எழுதுங்க.நீங்க அயல் நாட்டில் இருக்கீங்க.வெளிநாட்டுக்குப் போகாதவங்களே எனக்குத் தமிழ் அவ்வளவா வராது அப்படின்னு சொல்லிகிட்டிருப்பதை நிறைய பார்கிறோம்.இந்த சூழலில் தமிழ் மொழி வளர்ச்சி பற்றி யோசிக்கிறீங்க.அதுவே உண்மையில் பெரிய செய்தி.வணக்கம்.

March 1, 2011 at 6:01 a.m.  

Post a Comment

<< Home